Thursday, September 01, 2011

குடமிளகாய் -அசத்தல் சமையல்

குடமிளகாய் பொடி புலாவ்
தேவையான பொருட்கள்
குடமிளகாய்-1
வெங்காயம்-1
காரட்-1
பட்டாணி-1 கப்
கடலைப்பருப்பு-1/2 கப்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1/4கப்
மிளகாய் வற்றல்-8
காயம்-சிறிதளவு
உப்பு-தேவையான அளவு
கறிவேப்பிலை-1 இணுக்கு
சாதம்-தேவையான அளவு
செய்முறை
1.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்யவும்.
2.அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
3.நறுக்கிய குடமிளகாய்,காரட்,பட்டாணி சேர்த்து உப்பு,மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் விடாமல் மூடி வைத்து வேக விடவும்.அவ்வப்போது கிளறி விடவும்.
4.ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,மிளகாய்வற்றல், காயம் சேர்த்து வதக்கவும்.
5.பருப்புகள் ஆறியவுடன் மிக்ஸியில் கரகரப்பாகத் திரித்து எடுத்து வெந்த காய்கறிகளுடன் சேர்க்கவும்.
6.சாதத்தை உதிர் உதிராக வேக வைத்து ஒரு அகன்ற பாத்திரத்தில் ஆற விட வேண்டும்.
7.காய்கறிக்கலவை ஆறியவுடன், சாதத்துடன் சேர்த்துக் கலக்க குடமிளகாய் மிளகாய்பொடி புலாவ் தயார்.
கூடுதல் குறிப்புகள்
1.மிகவும் ருசியான இந்தப் புலாவ் விரைவில் தயார் செய்யலாம்.
2.பருப்புகளை வறுத்துத் திரிப்பதற்குப் பதில் மிளகாய்ப்பொடியையே காய்கறிக்கலவையுடன் சேர்த்து செய்யலாம்.
3.திரித்த பருப்புகளை முழுவதுமாக சாதத்துடன் கலக்காமல் காரத்திற்கு ஏற்ப சிறிது சிறிதாகக் கலக்கலாம்.



குடமிளகாய் தால் தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு-1 கப்
குடமிளகாய்-1
பெரிய வெங்காயம்-1
தக்காளி-1
சீரகம்-1/2 டீஸ்பூன்
பச்சைமிளகாய்-4
நெய்-1 டீஸ்பூன்
செய்முறை:
1.குக்கரில் பாசிப்பருப்பைக் குழைய வேக விடவும்.
2.காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
3.வாணலியில் நெய் விட்டு சீரகம்,பச்சைமிளகாயைப் போட்டு வதக்கவும்,பிறகு அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி போட்டு வதக்கவும்.
4.பொடியாக நறுக்கி வைத்துள்ள குடமிளகாயைச் சேர்த்து வதக்கவும். உப்பு போட்டு மூடி வைத்து வேக விடவும்.
5.வெந்த பாசிப்பருப்பை வேக வைத்த காய்கறிகளுடன் சேர்த்து எலுமிச்சை பிழிந்து இறக்கி வைக்கவும்.
6.தாலில் அலம்பிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.
கூடுதல் குறிப்புகள்
1.பத்தே நிமிடங்களில் தயார் செய்யக்கூடிய எளிய தால் சப்பாத்தி,பூரி வகையறாக்களுக்குச் சிறந்த இணை.
2.பாசிப்பருப்பிற்குப் பதில் துவரம்பருப்பு சேர்த்தும் இந்த தால் செய்ய வித்தியாசமான ருசி கிடைக்கும்.
3.பச்சைமிளகாய் காரத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.
4.எலுமிச்சையை முதலிலேயே பிழியக் கூடாது, தாலை இறக்கி வைக்கும் போது தான் பிழிந்து விட வேண்டும்.


குடமிளகாய் கொத்ஸ¤
தேவையான பொருட்கள்
குடமிளகாய்-1
வெங்காயம்-1
நாட்டுத்தக்காளி-1
காயம்-சிறிதளவு
எண்ணெய்-1 டீஸ்பூன்
கடுகு-1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை-1 இணுக்கு
சாம்பார்பொடி-1 டீஸ்பூன்
கொத்தமல்லி-தேவையான அளவு
செய்முறை
1.காய்கறிகளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு,கடலைப்பருப்பு,வெள்ளை உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை தாளிசம் செய்து கொள்ளவும்.
3.வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும்.
4.தக்காளி,குடமிளகாயை வதக்கிய வெங்காயத்துடன் சேர்த்து உப்பு,சாம்பார்பொடி,காயம் சேர்த்து மூடிக் கொள்ளவும்.அவ்வபோது கிளறி விடவும்.
5.காய்கறிகள் வெந்தவுடன் ஒரு பாத்திரத்தில் மாற்றி கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்.
கூடுதல் குறிப்புகள்
1.கொத்ஸ¤வில் காரம் அதிகமாகி விட்டால் கொத்ஸ¤வை இறக்கும் போது எலுமிச்சை பிழிந்து விடலாம். இல்லையென்றால் வெல்லம் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கக் காரம் மட்டுப்படும்.
2.பூண்டு சேர்க்க விரும்புபவர்கள் வெங்காயத்தை வதக்கும் போது அரைப் பல்லு சேர்த்துக் கொள்ளலாம்.
3.சப்பாத்தி,பூரி,இட்லி,தோசை போன்ற சிற்றுண்டிகளுக்குச் சிறந்த துணை இந்தக் குடமிளகாய் கொத்ஸ¤.
4.சாம்பார் வெங்காயம் மற்றும் நாட்டுத்தக்காளியில் குடமிளகாய் கொத்ஸ¤ செய்ய சுவை அதிகரிக்கும்.
5.புளிப்புச்சுவை வேண்டுவோர் புளிநீரைக் கெட்டியாகக் கரைத்து காய்கறிகளுடன் சேர்த்துக் கொதிக்க வைக்க சுவையான புளிப்புக்குடமிளகாய்கொத்ஸ¤ தயார்.


குடமிளகாய் ஊத்தப்பம்
தேவையான பொருட்கள்
வெங்காயம்-1
தக்காளி-1
குடமிளகாய்-1
பச்சைமிளகாய்-2
இட்லிமாவு-தேவையான அளவு
செய்முறை
1.காய்கறிகளையும் பச்சைமிளகாயையும் மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2.தோசைக்கல்லில் இட்லிமாவை வட்டமாக ஊற்றி உடனேயே வெங்காயத்தையும் குடமிளகாயையும் மாவைச் சுற்றிலும் தூவ வேண்டும்.
3.பிறகு தக்காளி,பச்சைமிளகாயைப் போடவும்.
4.ஊத்தப்பத்தைச் சுற்றி எண்ணெய் விடவும்.
5.வெந்தவுடன் ஊத்தப்பத்தைத் திருப்பிப் போட்டு வேக விடவும்.
கூடுதல் குறிப்புகள்
1.வெறும் தோசையாக உண்ணாமல் காய்கறிகள் சேர்த்து ஊத்தப்பம் செய்து உண்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
2.மாவு கொஞ்சமாக இருந்தால் காய்கறி ஊத்தப்பம் செய்து உண்டால் உண்ட திருப்தியும் கிடைக்கும்.
3.மாவைத் தோசைக்கல்லில் ஊற்றி காய்கறிகள் போட்ட பிறகு தோசைமிளகாய்ப்பொடியை மாவைச் சுற்றிலும் தூவி வேகவைக்க பொடிவெஜிடபிள்ஊத்தப்பம் தயார். மிளகாய்ப்பொடி சேர்க்க விரும்பினால் பச்சைமிளகாய் சேர்க்கத் தேவையில்லை.
4.சுவையான ஊத்தப்பத்திற்குச் சட்னியோ,சாம்பாரோ தேவையில்லை. வெறுமனே உண்ணவே நன்றாக இருக்கும், ஒரே ஒரு விஷயம் என்னவென்றால் சூடாக இருக்கும் போதே இந்த ஊத்தப்பத்தை உண்ண வேண்டும். ஆறினால் நன்றாக இருக்காது.


டிப்ஸ்:
1.சமைத்தக் காய்கறிகளைத் தினமும் இரண்டு வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
2.உணவகங்களில் பச்சைக் காய்கறிகளையோ தயிர்சாதத்தையோ சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்(உணவகங்களில் தயிர்சாதத்திற்குப் பயன்படுத்தும் சாதம் மிகவும் பழைய சாதம் என்பதால் தயிர்சாதம் மட்டும் உணவகங்களில் உண்ணக் கூடாது)
3.பூண்டைத் தண்ணீரில் மூழ்க வைத்து பத்து நிமிடங்கள் கழித்து உரிக்க சுலபமாக வரும்.
4.வெங்காயம் வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்க சீக்கிரம் வதங்கும்.
5.காய்கறிகளை மூடி வைத்துச் சமைக்க சீக்கிரம் வேகும்.நேரமும் மிச்சமாகும்.
6.உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும்.குடமிளகாயில் கொழுப்புச்சத்து,கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
7.குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
8.கண்பார்வையைச் சிறப்பாக்கவும் இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்ட விடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
9.குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.
10.குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு  பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment