Sunday, January 23, 2011

மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!

மகரஜோதி மனித தயாரிப்பே : தேவசம்போர்டு!


ஒவ்வொரு ஆண்டும் சபரிமலையில் மகரவிளக்குப் பூஜை நாளன்று தென்படுவதாகக் கூறப்படும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று திருவாங்கூர் தேவசம்போர்டு நிர்வாகிகள் கூறியிருப்பதாக தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மகரஜோதி மனித தயாரிப்பா என்று கேரள உயர் நீதிமன்றம் கடந்த வியாழக் கிழமையன்று கேள்வி எழுப்பியது. இக்கேள்விக்கு விடைகாணும் முயற்சியில் தி இந்து நாளிதழ் ஈடுபட்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலை நிர்வகித்து வரும் திருவாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகத்தினரை வெள்ளிக் கிழமையன்று சந்தித்து இது தொடர்பாக கேள்வி எழுப்பியது.

குறிப்பிட்ட நாளன்று பொன்னம்பலமேடு பகுதியில் காணப்படும் ஜோதி மனித தயாரிப்பே என ஒப்புக் கொண்ட திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவர் ராஜகோபாலன் நாயர், ஆனால் இந்த ஜோதியை உருவாக்குவதில் தேவசம் போர்டுக்குத் தொடர்பில்லை என்றும் கூறியுள்ளார்.

மகரஜோதியை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்

மகரஜோதியை ஆர்வமுடன் காணும் பக்தர்கள்

பழங்காலத்தில், காட்டுவாசிகள் மகரவிளக்கு விழாவினை பொன்னம்பலமேடு பகுதியில் கொண்டாடுவார்கள் என்று நம்பப்படுகிறது. அப்போது பொன்னம்பலமேடுவில் ஜோதியை ஏற்றி மகரவிளக்கு விழாவைக் கொண்டாடுவார்கள். காட்டுவாசிகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றுவிட்ட பின்னரும் இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது என்றும் ராஜகோபாலன் நாயர் கூறியுள்ளார்.

பன்டலம் அரண்மலை மேலாண்மைக் குழுத் தலைவர் ராமவர்மா ராஜா மற்றும் கோயிலின் தலைமைப் பூசாரி கன்டரராரு மகேஷ்வரரு ஆகியோரும் மகரஜோதி மனித தயாரிப்பே என்று ஒப்புக் கொண்டுள்ளதாகவும் தி இந்து நாளிதழ் கூறியுள்ளது.

மகரவிளக்கு நாளின் போது சபரிமலை சன்னிதானத்திற்கு மேல் மலை உச்சியில் தென்படும் நட்சத்திரத்தின் ஒளிதான் மகரஜோதி என்றும் தற்போது பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் ஜோதி மகரஜோதி அல்ல என்றும் தலைமைப் பூசாரி கூறியுள்ளார்.

பொன்னம்பலமேடு பகுதியில் தெரியும் மகரஜோதி மனித தயாரிப்பு என்பது உண்மை என்றாலும் அது நம்பிக்கை சார்ந்தது என்று ஐயப்பா சேவா சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் விஜயகுமார் கூறியுள்ளார்.

மகரஜோதி மனித தயாரிப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது ஐயப்ப பக்தர்களின் மனதில் புனிதம் பெற்ற நிகழ்வாக இடம்பெற்றுவிட்டது என்று இந்து ஐக்கியவேதி அமைப்பின் பொதுச் செயலாளர் கும்மனம் ராஜசேகரன் கூறியுள்ளார்.

மகரஜோதியும் பொன்னம்பலமேடும் சபரிமலை கோயிலின் அடிப்படையான இடம் என்று கருதப்படுகிறது. இவை ஆழ்ந்த மத நம்பிக்கையின் உண்மைப் பகுதிகள். பொன்னம்பலமேடுவில் சிமெண்ட் தரையைக் கட்டியது திருவாங்கூர் தேவசம் போர்டுதான் என்றும் ராஜசேகரன் கூறியுள்ளார். கேரள உயர் நீதிமன்றத்தின் அறிவிற்குட்பட்டு தேவசம்போர்டால் கட்டப்பட்டதே இந்த இடம் என்றும் கூறியுள்ள ராஜசேகரன், புல்மேடு விபத்திலிருந்து மக்கள் கவனத்தைத் திருப்புவதற்காக சிலர் மகரஜோதி குறித்து பிரச்சனைகளை எழுப்புகின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப்படும் இடம். வட்டத்தில் சபரிமலை சன்னிதானம்

மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப்படும் இடம்




























பொன்னம்பலமேடுவில் மகரஜோதிக்காக விளக்கு எரிக்கப் பயன்படுத்தப்படும் இடம் 1990களில் திருவாங்கூர் தேவசம் போர்டால் கட்டப்பட்டது. இந்தப் புகைப்படம் உரிய அனுமதி பெற்று 2006ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது என்றும் அந்தப் பகுதிக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தி இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நன்றி : இந்நேரம்.காம்

No comments:

Post a Comment