Saturday, March 12, 2011

மைசூர் - இயற்கை சுற்றுலா

 

Mysore Palace - image courtesy: Wikipedia

உங்களில் பெரும்பாலானவர்களுக்கு அனேகமாக இப்போது லீவு விட்டிருக்கும். எங்கே போகலாம் என்ற யோசனையும் கூட வரும். முதலில் உங்கள் நெருங்கின உறவினர்களைப் பார்த்துவிட்டு, பின் ஒரு இயற்கை சூழ்ந்து நமக்கு மகிழ்ச்சி கொடுக்கும் இடத்திற்கும் போக வேண்டும். இதில் நமக்கு அந்தப் புது இடத்தின் பழக்க வழக்கங்கள், அங்கிருக்கும் மக்கள், சீதோஷ்ணம் என்று பலவிவரமும் தெரிய வந்து, அறிவும் பெருகும். இதில் பணம் செலவழிந்தாலும் மனம் மிகவும் நிறைவு பெறும். நான் முன்பு மைசூர் போயிருந்தேன். ஆ! மைசூர் என்றவுடன் மைசூர்பாக் ஞாபகம் வந்து நாக்கில் ஜலம் ஊறுமே.
சுமார் 75 வருடங்கள் மைசூரை சுல்தான் ஹைதர் அலியும், பின் திப்பு சுல்தானும் ஆண்டு வந்தனர். மைசூர் அரண்மணையின் அழகோ அழகு. அதைத்தவிர, பழைய காலக் கட்டிடங்கள் ஜகன் மோஹன் அரண்மனை லலிதா மஹால், வசந்த மஹால் போன்றவை மிகவும் அழகாகக் கட்டப்பட்டிருகின்றன. இங்கு பிருந்தாவன கார்டன் மிகப் பெருமை
Brindavan Garden, Krishnaraja sagar, Mysore - Image courtesy: Answers.com
வாய்ந்த இடம். முன்பு இந்த இடத்தில் தான் பல சினிமாப் படப்பிடிப்புக்கள் நடந்திருக்கின்றன. இசைக்கு ஏற்றவாறு நடனம் ஆடும் தண்ணீர்ப் பெருக்கு எல்லோர் மனதையும் கவரும், தவிர திரு விஸ்வேஸ்வரய்யா அணையும் அதிலிருந்து வரும் மின் சக்தியும் நம்மை அதன் அருகில் நிற்க விடாது, அவ்வள்வு வேகம், அதைப்பார்த்தால் திரும்பி வரவே தோன்றாது. அந்த "ஜோ" என்ற சத்தம் இன்னும் என் காதில் ஒலிக்கிறது, இது எல்லாம் சாதாரணமாக எல்லோரும் பார்க்கும் இடங்கள்.
Brindavan Garden, fountain - Image courtesy: Answers.com
இப்போது புது இடமாக நாம் "ரங்கநாத திட்டு என்ற இடத்திற்குப் போவோமா? இது ஒரு பறவைகள் சரணாலயம் மைசூரிலிருந்து ஒரு 15 நிமிடங்கள் காரில் போனால் வந்து விடும். சுற்றிப் பசுமை நிலம், பெயர் மாண்டியா தாலுகா, இந்தியாவிலேயே மிக அழகான, அருமையான் சரணாலயம் இதுதான் என்கிறார்கள். ஸ்ரீ ரங்கநாத ஸ்வாமியின் பெயரைக்கொண்டு இந்த ரங்கநாதத் திட்டு வந்துள்ளது. ஸ்ரீரங்கபட்டினம் என்ற இடத்தில் பள்ளி கொண்ட ஸ்ரீ ர்ங்கநாதரைப் பார்க்கலாம். "திட்டு" என்றால் ஒரு சிறிய நிலம் அதைச் சுற்றிலும் நீர், ஒரு குட்டித் தீவு என்றுச் சொல்லலாம். இங்கு கவிரி நதியின் ஓட்டம் ஆறு இடங்களில் சின்னச் சின்னத் திட்டுகளை உண்டாக்கி இருக்கிறது, அந்த இடத்தைப் பார்க்க வேண்டுமே, மிக மிக அழகு. அந்த இயற்கையில் கடவுள் நமக்குப் புலப்படுகிறார். பின் ஒரு ஒத்தை அடிப் பாதை. இரண்டு பக்கங்களும் மரங்கள் சலசல்வென்று அசைய, நிழலகள் கொடுக்க, கீச் கீச் என்றப் பறவைகள் அழகாகக் குரல் கொடுக்க, ஆஹா! நம்மையே நாம் மறந்து போகிறோம். கீழே சிறு சிறு கூழாங்கற்களும் நாம் அதன் மேல் நடக்கும் போது சரக் "சரக்' என்ற ஒலியும் அந்த இசைக்குத் தாளம் போடுகின்றன. சுற்றி இருக்கும் கொடிகளும் செடிகளும் மனதைச் சுண்டி இழுக்கின்றன, உள்ளே போகப் போக இளைப்பாரும் இடம் வருகிறது. அதைச்சுற்றி மூங்கில்கள் வளைந்து வளைந்து அந்த இசைக்கு நடனம் ஆடுகின்றன.

Ranganathathittu wildlife santuary - image courtesy:India wildlife resorts
அங்குப் பலதரப்பட்ட பறவைகளை நாம் பார்க்கலாம். அதற்கு தூரதர்சனக் கண்ணாடி (பைனாகுலர்) மிகவும் தேவை, இல்லாவிட்டால் கூட வரும் உதவியாளர் காட்டும் பறவைகள் நமக்குத் தெரிவதில்லை சில பறந்தும் போய் விடுகின்றன, சத்த்த்தில். ஆஹா! இயற்கையோடு பறவைகளுடன் சேர்ந்து குளுமையான சுத்தப் பிராணவாயு சேர, மனதில் ஒரு தனி இன்பம் தோன்றுகிறது. ம்... அதுவும் வரிசை வரிசையாகப் பல வரிகள் வைத்து சில பறவைகள்... V போன்று வடிவம் அமைத்து வெள்ளைப் பறவைகள் மனதைக் கொள்ளை கொள்கின்றன. கூடவே மூலிகைச்செடிகளின் வாசனை தென்றலில் கல்ந்து வருகிறது. எவ்வளவு நடந்தாலும் சோர்வு தெரிவதில்லை. பலவிதமான நாரைகள், கொக்குகள், அன்னங்கள், வெள்ளை கறுப்புக் கலந்த வாத்துகள், பலவிதமான மைனாக்கள், காதல் பறவைகள், குயில்கள், மண்கொத்திப் பறவைகள் முதலியன இங்கு வந்து இந்த இடத்தை மேலும் அழகு படுத்துகின்றன.
Ranganathathittu wildlife santuary - image courtesy:India wildlife resorts
டாக்டர் அலி என்பவர் 1940 ல் இந்தியப் பறவைகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். நாம் படகில் போனால் அவர் எழுதிய பறவைகள் எல்லாம் மிகச் சமீபத்தில் காணலாம். ரூபாய் 200 கொடுத்து டிக்கெட் எடுத்தால் நம்மை அழைத்துப் போய் முதலை, ஆமை, மற்ற நீர் வாழும் இனங்களை மிகச் சமீபத்தில் காணலாம். சில முதலைகள் மீன் நிறையப் பிடிப்பதால் இங்கு பலதரப்பட்ட மீன்களும் அதிகமாக இருக்கின்றன. நிறைய பறவைகள் வட அமெரிக்கா, சைபீரியா, யுரேசியா, ஆஸ்ட்ரேலியா போன்ற இடங்களிலிருந்து வந்து இங்குத் தங்கி முட்டை இட்டுப் பின் குஞ்சு பொறித்து, அங்கு வெப்ப நிலை மாறியவுடன் திரும்புகின்றன. அங்கு கடும் குளிராய் இருக்கும் போது இங்கு வருகின்றன, எப்படித்தான் இவ்வளவு மைல்கள் பறந்து வழி தப்பாமல் வந்து போகின்றன என்பது மிகவும் வியப்புக்குறிய விஷயந்தான். மிகவும் பிரமிப்பாகத்தான் இருக்கிறது. பறவைகளை நாம் பார்க்கப் போகிறோம், அவைகள் நம்மை வியப்புடன் பார்க்கின்றன. சில இடங்கலில் வௌவால்கள் தொங்குகின்றன. இரவில் ஊர் சுற்றிவிட்டுப் பகலில் தூங்குகின்றன. மரத்தில் இருக்கும் பழங்களைச் சாப்பிடுகின்றன. இவ்வளவும் நிதானமாக அனுபவித்துப் பார்க்க, அந்தச் சிருஷ்டியின் ரகசியம் புரிகிறது. இதே போல் அடிக்கடி இயற்கையுடன் இணைவோம், இயற்கையைப் பாதுக்காப்போம். இயற்கையை வணங்குவோம்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

1 comment: