Thursday, March 10, 2011

தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்

தேர்வில் வெற்றி பெற சில ஆலோசனைகள்

1. அதிகாலையில் எழுந்து படித்தால் அது மனதில் அழுத்தமாகப் பதியும். தினமும் அதிகாலையில் குறைந்தது இரண்டு மணி நேரம் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
2. அமைதியான இடத்தில் வசதியாக அமர்ந்து படிக்க வேண்டும்.
3. படிப்பதை ஒரு முறை எழுதிப் பார்க்கலாம். இப்படி எழுதிப் பார்ப்பது மனதில் மிகவும் ஆழமாகப் பதிந்து விடும். 
4. அன்றைய பாடங்களை அன்றே திட்டமிட்டுப் படித்து விடுங்கள். நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்பது பின்னால் சுமையாகிப் போய் விடும்.
5. விடுமுறை நாட்களில் அனைத்துப் பாடங்களையும் ஒரு முறை திருப்பிப் படித்துக் கொள்ள வேண்டும்.
6. நண்பர்களுடன் உரையாடும் போது பாடங்கள் குறித்து அதிகமாகப் பேச வேண்டும். நமக்குள் இருக்கும் சில சந்தேகங்கள் அகலலாம்.
7. தேர்வு நாட்களில் மதிய உணவிற்குப் பின்பு இரண்டு மணி நேரம் தூங்கினால் நல்லது. இது புத்துணர்வை அளிக்கும்.
8. தேர்வு நாட்களில் அதிக நேரம் படிக்கிறேன் என்று அதிகமான நேரம் கண்விழித்துக் கொண்டிருக்கக் கூடாது. அந்த நாட்களில் குறைந்தது ஐந்து மணி நேரமாவது தூங்க வேண்டும். 
9. இரவு படித்து முடித்து படுக்கைக்குச் செல்லும் முன்பு படித்ததை நினைவுக்குக் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். 
10. தலைப்புகளின் வழியே சிறு குறிப்புகள் தயாரித்து தேர்வுக்கு முன்பு படித்துச் செல்லலாம். 
11. தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு முன்பே சென்று விட வேண்டும்.
12. வினாத்தாளை முதலில் முழுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். நன்கு தெரிந்த கேள்விகளுக்கு மட்டும் முதலில் பதில் அளிக்க வேண்டும். வினா எண், பக்க எண் போன்றவைகளை சரியாக எழுதி விட வேண்டும்.
13. தேர்வுக்கான முழு நேரத்தையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேர்வு நேரம் முடியும் முன்பு நாம் அளித்துள்ள பதில்கள் சரியாக இருக்கிறதா என்று ஒரு முறை சரி செய்து கொள்ள வேண்டும்.
14. தேர்வு முடியும் முன்பு விடைத்தாள்களைக் கட்டி மொத்தப்பக்கங்கள், கூடுதல் விடைத்தாள்கள் போன்றவைகளை சரியாக எழுத வேண்டும்.
15. உரக்கப் படிப்பதை விட மனத்திற்குள் பதியும்படி படிக்க வேண்டும். 
16. தேர்வுக்குச் செல்லும் போது சாப்பிடாமல் செல்லக்கூடாது. அதனால் ஏற்படும் களைப்பு பதில் அளிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
17. குறிப்பிட்ட வினாவிற்கு பதில் அளிக்க அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது. 
18. தேர்வு எழுதும் போது விடையளிப்பதில் மட்டுமே கவனமிருக்க வேண்டும். சுற்றிலும் பார்த்துக் கவனத்தை திசை திருப்பி விடக்கூடாது.
19. விடைத்தாள் திருத்துபவர்கள் மனதில் நம் விடைத்தாள்கள் நல்ல நிலையில் எழுத்துக்களை அழகாகவும் போதுமான இடைவெளி விட்டு தலைப்புகள் தனியே தெரியும்படி அடிக்கோடிட்டும் இருந்தால் நன்றாக இருக்கும்.
20. விடைத்தாளில் வினாக்களுக்கு படங்கள் அவசியமெனில் படங்களை வரைந்து தேவையான வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான குறிப்புகளையும் எழுதுங்கள்.
இந்த குறிப்புகளை மட்டும் நீங்கள் கடைப்பிடித்துப் பாருங்கள்... உங்கள் தேர்வு முடிவுகள் நீங்கள் எதிர்பார்த்தை விட நன்றாக இருக்கும். வாழ்த்துக்கள்.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் vote-ஐ பதிவு செய்யவும் - நன்றியுடன் jskpondy

No comments:

Post a Comment